தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பேய் மழை..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன் தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. முதலில் மெதுவாக பெய்த மழை நேரம் போகப் போக பேய் வேகத்தில் 4 மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கியது.

மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை, அதனுடன் இணைந்த சேர்வ லாறு அணை பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்தது. மழை காரணமாக மணிமுத்தாறு அருவி இருக்கும் பகுதி தெரியாத அளவுக்கு வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது.

தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது. இந்த நீர் ஆற்றங்கரை யோர கிராமப்பகுதிகளிலும் புகுந்துள்ளது. இதனால் ஆற்றின் அருகே யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 76 செ.மீட்டர், திருச்செந்தூரில் 63 செ.மீட்டரும் ஸ்ரீவைகுண்டத்தில் 57 செ.மீ. கோவில் பட்டி 35 செ.மீட்டர் மழையும் தற்போது வரை மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.