மாற்றம் என்று கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த அரசு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதன் மூலம் எந்தவிதமான மாற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன். இவர் ஈத்தங்காட்டில் மளிகை கடை நடத்தி வந்தார்.
கடந்த 9-ந் தேதி இவரது கடையில் சோதனை நடத்திய தென்தாமரைக்குளம் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருந்ததாக கூறி சபரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் அதிகாலையில் சபரிவர்மன் மயக்க நிலையில் கிடந்ததாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.
அங்கு பரிசோதனையில் சபரிவர்மன் உயிரிழந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தகவல் சபரிவர்மனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், சபரிவர்மனை காவல்துறையினர் சரமாரி தாக்கி கொன்றுள்ளனர். இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவரது மனைவிக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி முன்னிலையில் சபரிவர்மனின் உடலை நேற்று பகல் 12 மணிக்கு பிரேத பரிசோதனை செய்தனர். நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது.
அறிக்கையின்படி, சபரிவர்மனின் வலது முன்னங்கை மற்றும் வலது காலின் கீழ்ப்பகுதியில் கட்டி வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவர் சிறைக்குள் கட்டி வைத்து தாக்கப்பட்டிருப்பது, வலது கையில் பலத்த ரத்தக்கட்டு இருப்பதுடன், அங்கு எலும்பு முறிந்திருப்பதும், தோலுக்கு அடியில் பல இடங்களில் ரத்தம் உறைந்து போயிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மண்டை ஓட்டைப் பிரித்து ஆய்வு செய்தபோது, சபரிவர்மனின் உச்சந்தலையில் தடிமனான ரத்தக்கட்டும், பிடரி பகுதியில் ஆழமான காயமும் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே சபரிவர்மனின் உறவினர்கள், அவரது உடலில் காயம் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர். தற்போது வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில் எலும்பு முறிவு உட்பட 19 காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், சபரிவர்மன் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறை வார்டன் உட்பட சிறை காவலர்கள் 3 பேர் அகுது செய்யப்பட்டுள்ளனர். சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருவிடைநம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மீண்டும் லாக் அப் மரணம் நடந்திருப்பதால், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள அத்தன்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்றதாகக் கூறி ஜூலை 3 அன்று தென்தாமரைக் குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஜூலை 13 அன்று காலை சிறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். கைதலபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவரது உடற்கூறு பரிசோதனையில் அவரது உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் 100 லாக்கப் படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது தமிழ்நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் மூன்று காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டுமே போதுமான தீர்வாகாது. இனி தமிழகத்தில் எங்கும் லாக் அப்படுகொலைகள் நடைபெறாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தை மீறியவர்களுக்கு நண்டனை வழங்குவதற்கான அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது.
சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு ஒருவரின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மாற்றம் என்று கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த அரசு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதன் மூலம் எந்தவிதமான மாற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
எனவே, காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் அவர்கள், இந்தக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொக்கிறோம். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.