‘உள்ளத்தை அள்ளித்தா’ பட பணியில் ரூ.30 லட்சம் கேட்டு கடத்தினாங்க… ரூ.7,000 கேட்டு கெஞ்சுனாங்க…

நடிகர் கார்த்திக் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 1996 -ம் ஆண்டு வெளிவந்த படம் ‘உள்ளத்தை அள்ளித்தா’. இந்த படத்தில் மணிவண்ணனை கடத்திய கும்பலில் செந்தில், கவுண்டமணியிடம் பணம் கேட்டு மிரட்ட ரூ.5 லட்சம் கேட்டு படிப்படியாக குறைத்து, கடைசியில் டெம்போ வைச்சு கடத்தியிருக்கோம் 4 ஆயிரமாவது கொடு என்று கெஞ்சுவார். அதேபோல ஒரு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

சேலம் செவ்வாய்பேட்டை அக்ரஹார தெருவை சேர்ந்த சம்பத் சிங் மற்றும் இவரது மகன் வினோத்சிங். இவர்கள் செவ்வாய்பேட்டையில் எலக்ட்ரானிக் பொருட்கள் மொத்த விற்பனை கடை வைத்துள்ளார். இவரது கடை ஊழியரான அதே பகுதியை சேர்ந்த புக்குராஜ். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை பெங்களூருக்கு எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க காரில் சென்றனர்.

அப்போது, தர்மபுரி மாவட்டம் மாரவாடி பிரிவு ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் அருகே சென்றபோது சாதாரண உடையில் இருந்த 5 பேர் இவர்களது காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் காவல்துறை எனவும், உங்களது காரை சோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து காரில் சோதனையிட்டனர். அப்போது அந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென காரினுள் ஏறி, வினோத் சிங் மற்றும் புக்குராஜை மிரட்டி, காருடன் கடத்திச் சென்றனர்.

பின்னர், சம்பத் சிங்கின் தம்பியான மனோகர் சிங் என்பவருக்கு போன் செய்து, ‘உங்களது அண்ணன் மகன் மற்றும் அவரது கடை ஊழியரை கடத்தியுள்ளோம், இருவரையும் விடுவிக்க ரூ.30 லட்சம் தர வேண்டும்’ என கூறியுள்ளார். மேலும் பணத்தை கொண்டு வரும் போது செல்போன் நம்பரை தொடர்பு கொள்ள வேண்டும் எனக்கூறி ஒரு நம்பரையும் கொடுத்து விட்டு போனை துண்டித்துள்ளார்.

பின்னர் மீண்டும் அந்த நபர் பேசிய நம்பருக்கு மனோகர் சிங் போன் செய்தபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி மனோகர் சிங், மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்போது அந்த மர்மநபர் கொடுத்த செல்போன் நம்பருக்கு காவல்துறை போன் செய்தபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, காவல்துறை விசாரணையை துவக்கிய நிலையில், கடத்தல்காரர்கள் மனோகர்சிங்கை மீண்டும் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளனர். அவர் அவ்வளவு பணம் இப்போது இல்லை எனக்கூறியவுடன், ரூ.10 லட்சமாவது கொடு என கேட்டுள்ளனர்.

அதற்கும் அவர் மறுக்கவே ரூ.3 லட்சம், ரூ.30 ஆயிரம் என படிப்படியாக இறங்கி வந்து இறுதியாக ரூ.7 ஆயிரத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். செல்போன் நம்பரின் சிக்னலை வைத்து குற்றவாளிகளை காவல்துறை நெருங்கினர். காவல்துறை தங்களை நெருங்குவதை அறிந்து கொண்ட கடத்தல் கும்பல், கடத்திய இருவரையும் சூளகிரி-ஓசூருக்கு இடையில் இறக்கிவிட்டு காருடன் தப்பி ஓடியுள்ளார்.