தருமபுரி மாவட்டத்தில் 498 முழுநேர நியாய விலைக் கடைகள் மற்றும் 586 பகுதிநேர நியாய விலைக் கடைகள் வாயிலாக 4.68 லட்சம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கும் ஏற்ப ஆங்காங்கே புதிய பகுதிநேர நியாய விலைக் கடைகள் திறக்கப்படுகின்றன.
அதன்படி, அதகப்பாடி அடுத்த செந்தில் நகர் பகுதியில் அண்மையில் புதியதாக பகுதிநேர நியாய விலைக் கடை திறக்கப்பட்டது. அதகப்பாடி, சின்ன தடங்கம், செந்தில் நகர் பகுதிகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அதகப்பாடியில் முழுநேர நியாய விலைக் கடை இயங்கி வந்த நிலையில் செந்தில்நகர் பகுதி மக்கள் நீண்டதூர அலைச்சலை தவிர்க்கும் வகையில் பகுதிநேர நியாய விலைக் கடை ஏற்படுத்த கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பலனாக 215 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் செந்தில் நகர் பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடையை அண்மையில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
பெரும்பாலான வர்த்தக மையங்களில் இணைய பணப் பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்தக் கடையில், தருமபுரி மாவட்டத்திலேயே முதல்முறையாக க்யூஆர் கோடு மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு இணைய பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது நியாய விலைக் கடையிலும் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை செந்தில் நகர் பகுதி குடும்ப அட்டைதாரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.