நாகப்பட்டினம் நகராட்சியில் நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர், நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியத்தில் கணக்கில் வராத ₹1.03 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்குப் பல்வேறு சேவைகள் வழங்கி வருகின்றது. இவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டுமென்று விதிமுறை உள்ள நிலையில் பல இடங்களில் கூடுதல் தொகை கேட்கப்படுவதாகவும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்து சோதனை நடத்தத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று மாலை ஒரே நேரத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் நகராட்சியில் நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர், நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். சோதனைக்காக அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு, உள்ளிருந்த அலுவலர்கள் மற்றும் ஆவணங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன.
முறைகேடுகள் உள்ளதா? லஞ்ச புகார்களுக்கு ஆதாரங்கள் உள்ளனவா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இரவு வரை நீடித்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.