பொதுப்பாதையை பயன்படுத்திய பட்டியலின தாய், மகன் மீது அதிமுக கவுன்சிலர் தாக்குதல்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள பாப்பினி ஊராட்சி கொளத்துப்பாளையம் பட்டியலினத்தை சேர்ந்த முத்துசாமி. இவர் வீட்டின் முன் உள்ள பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முத்துச்சாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆதிக்க ஜாதியினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் பொது வழிப்பாதையை பயன்படுத்த கூடாது என மிரட்டி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கயம் ஒன்றிய அதிமுக அவை தலைவரும், யூனியன் கவுன்சிலருமான பழனிசாமி தலைமையில் கட்ட பஞ்சாயத்து நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, அதிமுக கவுன்சிலர் பழனிசாமி தலைமையில் ஆதிக்க ஜாதியினர், முத்துச்சாமியை ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். முத்துசாமி தாக்கப்படுவதை கண்ட அவரது தாய் அருக்காணி தடுக்க முயன்ற போது அக்கும்பல் தாயையும் தாக்கியது. இதில் காயமடைந்த முத்துசாமி காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து அதிமுக கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி காங்கயம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அதிமுக கவுன்சிலர் பழனிசாமி, நாகரத்தினம், தனசேகரன் ஆகிய 3 பேர் மீது எஸ்சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், உள்ளிட்ட 3 பிரிவுகளில் காங்கயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.