ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பதான் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி அணிந்து இருந்ததாக கூறி இந்துத்துவ அமைப்பினர், பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த படத்தை திரையிட்டால் தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து காவி நிற ஆடை மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் ஷாருக் கானின் அடுத்த படமான ஜவானுக்கு எதிராகவும் இந்துத்துவா மற்றும் பாஜகவினர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். பிரபல தமிழ் இயக்குநர் அட்லி இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் படம் ஜவான். இதற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
நடிகர்கள் விஜய், சஞ்சய் தத் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றங்களில் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்துத்துவாவினர் எதிர்ப்புக்கு மத்தியிலும் பதான் திரைப்படம் 1000 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை படைத்த நிலையில் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள ஜவான் திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உலகளவில் உள்ளது.
குறிப்பாக சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிர வைத்தது. இந்நிலையில்தான் பதான் படத்தை யார் எதிர்த்தார்களோ, அதே தரப்பு ஜவான் படத்திற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி இருக்கிறது. ட்விட்டரில் #BoycottJawanMovie என்ற ஹேஷ்டேக்கை பல ஆயிரக்கணக்கானோர் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
அட்லி இயக்கிய மெர்சல் படத்திற்கும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜவான் படத்தின் டிரெய்லரிலும் ஏதாவது சர்ச்சை உள்ளதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அந்த ஹேஷ்டேக்கை கிளிக் செய்து என்ன பதிவிட்டு உள்ளார்கள் என்று பார்த்தால் காரணமே வேறாக உள்ளது. ஆம், கடந்த சில நாட்களாக தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறி இருக்கும் அமைச்சர் உதயநிதியை காரணம்காட்டி விமர்சித்து உள்ளார்கள்.
உதயநிதிக்கும் ஜவான் படத்துக்கும் என சம்பந்தம் என்று பார்த்தால், விக்கி பீடியாவில் ரெட் ஜெயன்ஸ் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் ஜவான் படத்தை விநியோகம் செய்வதாக குறிப்பிடப்பட்டு இருப்பதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய உதயநிதி வெளியிடும் ஜவான் படத்தை புறக்கணிப்போம் என்று பதிவிட்டு உள்ளார்கள்.
இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்பவர்களில் பெரும்பாலானோர் வட இந்தியாவை சேர்ந்தவர்கள். வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் விநியோக உரிமையை பென் ஸ்டூடியோஸ் நிறுவனமே பெற்று உள்ளது. அதேபோல் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் ரூ.50 கோடிக்கு ஜவான் படத்தை கோகுலம் மூவீஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. ஆனால், ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெயரில் வெளியிடுகிறது. ஜவான் படத்தின் விக்கிபீடியா பக்கத்திலும் இது தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை வைத்துதான் ஜவானுக்கும் இந்துத்துவாவினர் பைகாட் சொல்லி வருகிறார்கள்.