நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறி வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி, மீண்டும் சீமான் மீது புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கோயம்பேடு துணை ஆணையர் உமையாளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ராமாபுரம் காவல் நிலையத்தில் வைத்து நடிகை விஜயலட்சுமியிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. காவல் நிலையத்துக்கு துணை ஆணையர் உமையாளும் வந்திருந்தார். விசாரணையில், சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் அதற்கான ஆதாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டன, அதற்கு நடிகை விஜயலட்சுமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விசாரணை சுமார் ஆறு மணி நேரத்துக்கு மேல் நடந்தது.
விசாரணைக்குப் பிறகு நடிகை விஜயலட்சுமி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமான் விவாதம் குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில் “சீமான் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் மற்றும் நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்தப் புகாரின்பேரில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
நடிகை விஜயலட்சுமியிடம் விசாரித்தவரை சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாகவே அவர் இருக்கிறார். அதற்காக சில ஆதாரங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். அதன் உண்மைத் தன்மைகளையும் ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் நடிகை விஜயலட்சுமி புகாரின்பேரில் நல்லதொரு முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.