காதலுக்கு கண் இல்லை காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். மொழி, இனம், அந்தஸ்து என எந்த பாகுபாடும் உண்மையான காதலுக்கு இல்லை என்பதையே இவ்வாறு சொல்வதுண்டு. அன்பும், பாசமும், புரிதலும் இருந்தால் போதும். கடல் கடந்த காதலும் நிச்சயம் கைகூடும் என்று பல சினிமாக்களில் பார்த்திருப்போம். அதேபோன்ற ஒரு சம்பவம் தான் கடலூரில் நடைபெற்றுள்ளது.
கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு பணி புரியும் சக ஊழியரான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவருக்கும் பத்மநாபனை பிடிக்கவே, இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் காதல் திருமணம் செய்வது குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இருவீட்டாரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே, தமிழ் கலாசாரப்படி மணமகன் வீட்டில் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக காதலி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை பத்மநாபன் கடலூருக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நேற்று பத்மநாபனுக்கும், ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு வெள்ளக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் இந்து முறைப்படியும், தமிழ் கலாசாரப்படியும் திருமணம் நடந்தது. மணப்பெண் தமிழ்நாட்டு பெண் போலவே சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி வந்திருந்தது அங்கிருந்தவர்களை ரசிக்க வைத்தது.
திருமணத்தின்போது பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் கலாசார முறைப்படி வேட்டி, சேலை அணிந்து கலந்து கொண்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, தமிழ் கலாசார முறைப்படி பெண் தமிழக பெண் போல் சேலை அணிந்து, பூ, பொட்டு வைத்து திருமணம் செய்து கொண்டதை பொதுமக்கள் வெகுவாக பார்த்து ரசித்தனர்.