விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்த வேலுமணி- பரமேஸ்வரி தம்பதியினரின் மகன் விக்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்படிப்புக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். அங்கு படிப்பை முடித்த விக்டர் பிரான்ஸிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அவருக்கும், அந்த நாட்டைச்சேர்ந்த கேன்சா என்ற இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
இதுபற்றி அவர்கள் தங்களது வீட்டில் பேசியுள்ளனர், காதலுக்கு இருவரின் பெற்றோரும் பச்சைக்கொடி காண்பித்தனர். இதையடுத்து அவர் தனது திருமணம் தமிழ் கலாசார முறைப்படி நடக்க வேண்டும் என விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அதன் பின்னர் விழுப்புரத்துக்கு தனது காதலி கேன்சா மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரை விக்டர் அழைத்து வந்தார். தொடர்ந்து, தமிழ் கலாசார முறைப்படி பெண் தமிழக பெண் போல் சேலை அணிந்து, பூ, பொட்டு வைத்து திருமணம் செய்து கொண்டதை பொதுமக்கள் வெகுவாக பார்த்து ரசித்தனர்.