ஊட்டியில் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நலத்திட்ட உதவிகள் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியர் அம்ரித் முன்னிலை வகிக்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது கயல்விழி செல்வராஜ் பேசிய, தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 8 லட்சம் பழங்குடியினர்கள் 37 வகையான பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் இயற்கையை பாதுகாத்து, பழங்குடியினர் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கின்றனர். பழங்குடியினரின் எதிர்காலமான இளைஞர்களின் வளர்ச்சி தான் மிகவும் முக்கியம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனிநபர் உரிமைகள் பழங்குடியினர் நலத்துறை மூலம் 320 உண்டு உறைவிடப்பள்ளிகள், 48 விடுதிகள் செயல்படுகிறது.

இதில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஏகலைவா பள்ளிகளில் 2,600 மாணவர்கள் படிக்கின்றனர். வகுப்பறை, ஆய்வகம், கழிப்பிட வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் சாதி சான்றிதழ் பிரச்சினைகளை களையவும், உண்மை தன்மையை சரிபார்க்கவும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,190 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், ஆர்.டி.ஓ. துரைசாமி, தாட்கோ தலைவர் மதிவாணன், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார் மேலும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், தோடர் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவரும் பகல்கோடு மந்துக்குச் சென்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜீக்கு, பாரம்பர்ய முறைப்படி வரவேற்பு அளித்தனர் அந்த மக்கள். அவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் குறைகளைக் கேட்டறிந்தவர், அந்த இனப் பெண்களின் பூத்துக்குளி எனும் பாரம்பர்ய உடையை அணிந்து நடனம் ஆடினார். மேலும் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பர்ய உணவையும் சாப்பிட்டார்.