பேஸ்புக்கில் அறிமுகம்…! ரூ.13.85 லட்சம் கையாடல்…!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அனுமன்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம், சிவகாசி ஆலங்குளம் சாலையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி பேச்சியம்மாள் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அப்போது, சிவகாசி கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றுவதாகக் கூறிய பேச்சியம்மாள், வங்கியில் 380 கிராம் அடகு நகைகள் ஏலத்துக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், நகைகளின் புகைப்படங்களையும் ரமேஷுக்கு அனுப்பியுள்ளார். இதை நம்பிய ரமேஷ் தனது நண்பர்களுடன், கடந்த 4-ம் தேதி காலை 10 மணிக்கு சிவகாசிக்கு வந்தார். அவரிடம் நகைகளை ஏலம் எடுப்பதற்கு ரூ.13.85 லட்சம் செலுத்த வேண்டும் என பேச்சியம்மாள் கூறினார். அதன்படி, ரூ.1.58 லட்சம் ரொக்கமாகவும், ரூ.11 லட்சத்தை பேச்சியம்மாள் கூறிய வங்கிக் கணக்கிலும் ரமேஷ் செலுத்தி உள்ளார். அதன் பின் நகைகளை எடுத்து வருவதாக வங்கிக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து ரமேஷ் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து காவல்துறை பேச்சியம்மாளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று சிவகாசியில் பேச்சியம்மாளை கைது செய்த காவல்துறை, அவரிடமிருந்து ரூ.12 லட்சத்தை மீட்டனர்.