எடப்பாடிக்கு நெருக்கமான கோபாலுக்கு அமமுகவில் தலைவர் பதவி…

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வி.கே. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்க்கில் சிறைக்குச் சென்றதும், வி.கே. சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக வி.கே. சசிகலாவும், தினகரனும் வழக்குத் தொடுத்தனர். அதிமுக பொதுச் செயலாளரான தன்னையும், துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரனையும் நீக்க முடியாது என கோர்ட்டில் வி.கே.சசிகலா தெரிவித்தார். இதற்கிடையே தனிக்கட்சியை டிடிவி தினகரன் தொடங்கினார்.

வி.கே. சசிகலா சிறையில் இருந்தபோதே அமமுகவை தொடங்கி, அதற்குப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்தார். ஆனால், தலைவர் பதவி மட்டும் காலியாக இருந்தது. தலைவர் பதவிக்கான பொறுப்பை துணைத் தலைவரே கவனித்து வந்தார். வி.கே.சசிகலாவுக்காக ‘தலைவர்’ பதவி காலியாக வைத்திருக்கப்பட்டுள்ளதாக அப்போது டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.

ஆனால், கடந்த ஆண்டு நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமமுகவில் வி.கே. சசிகலா இனி சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தினகரன் தரப்பில் அப்போதே கேட் போடப்பட்டது. எனினும், மறைமுகமாக சில பேச்சுகள் நடந்துகொண்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், வி.கே. சசிகலாவுக்காக இத்தனை ஆண்டுகளாக ‘ரிசர்வ்’ செய்யப்பட்டிருந்த தலைவர் பதவி இன்று நிரப்பப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில், பொதுச் செயலாளர், தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல் அமமுக தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கு இன்று பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமமுக தோற்றுவித்த பிறகு முதல் தலைவராக முன்னாள் எம்.பி கோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதல் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலும், துணைத்தலைவர் அன்பழகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள்.

1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பியாக சி.கோபால் செயல்பட்டவர். அவர் அமமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொதுக்குழுவில் அமமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி. கோபால் பற்றிப் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார்.

அவர் பேசுகையில், “கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோபாலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இயக்கத்துக்காக செயல்பட்டவர். கோபால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமியுடன் நட்பாகப் பழகியவர். அப்படி இருந்தும் அவர் எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லவில்லை.

அவரை போலவே அவரது மகன் சோளிங்கர் பார்த்திபனும் என்னுடன் உள்ளார். அவர் தந்தை சொல்லைப் பின்பற்றக்கூடியவர். நான் கூட கேட்டேன்.. என்னால் பலன் அடைந்தவர்களே எனக்கு எதிராகச் சென்று விட்டார்கள். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களே என கேட்டுள்ளேன். இன்று நான் பொதுச் செயலாளராக தேர்வான சான்றிதழையே பார்த்திபன் தான் எனக்கு வழங்கியுள்ளார்.” என டிடிவி தினகரன் பேசினார்.