விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர பாஜக துணைத்தலைவர் பாண்டியன். இவரின் மூத்த மகன் கார்த்திக்கிற்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், 2-வது மகன் முருகதாஸூக்கு ரயில்வேயிலும் வேலை வாங்கி தருவதாக, திருத்தங்கல்லை சேர்ந்த விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் கடந்த 2017ல் ரூ.11 லட்சம் வாங்கியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்த திருப்பி தராமலும் இழுத்தடித்தனர்.இதை தொடர்ந்து பாண்டியன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்தார். அதன்பின் தலா ரூ.2 லட்சத்திற்கு 5 காசோலை மற்றும் ரூ.1 லட்சத்திற்கு ஒரு காசோலை கொடுத்தனர். சில மாதங்கள் கழித்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொடுத்து ஒரு காசோலையை மட்டும் பாண்டியனிடம் இருந்து திரும்ப பெற்றனர். பாண்டியன் தன்னிடம் இருந்த 5 காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என திரும்பி வந்தன. இதனால் பாண்டியன், ரூ.9 லட்சத்தை திரும்ப கேட்டபோது இருவரும் பணம் தராமல் இழுத்தடித்தனர். இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து கலையரசனை கடந்த டிச.15ம் தேதி கைது செய்தனர். சுரேஷ்குமார் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ரூ.5.50 லட்சம் ரொக்க ஜாமீன் வழங்கியது. ஜாமீன் தொகையை செலுத்துவதற்கு மே 12 வரை காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் காலக்கெடு முடிந்தும் ஜாமீன் தொகையை செலுத்தவில்லை.இதையடுத்து விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார், பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர். சொந்த கட்சி நிர்வாகியிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்ய இருப்பது விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.