கட்சிக்காக இறங்கி வந்த ஓபிஎஸ்..! சீண்டாத எடப்பாடி பழனிசாமி..!

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக ஓ பன்னீர்செல்வம் சமாதானமாக பேச முன் வந்தாலும் கூட.. எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கி வர மறுத்துள்ளது. இந்த தேர்தல் மூலம் அதிமுகவில் சமாதானம் நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் இடையிலான மோதல் இன்னும் பெரிதாகி உள்ளது.

அதிமுகவில் எப்போது என்ன பிரச்சனை வந்தாலும்.. கூடவே ஒரு இடைத்தேர்தலும் வந்துவிடும். அதாவது 2017-ல் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அதேபோல்தான் இப்போது .தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் ஜூலை 9-ந் தேதி நடக்க உள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், என்று மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் கிட்டத்தட்ட 500 பதவிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இதற்கு அவர்கள் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர். இன்று படிவம் ஏ மற்றும் பி இரண்டையும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இன்று மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கவில்லை என்றால் வேட்பாளர்கள் அதிமுக வேட்பளார்களாக கருதப்பட மாட்டார்கள். இந்த படிவங்களில் ஓபிஎஸ், இபிஎஸ்தான் கையெழுத்து போட வேண்டும். ஆனால் எடப்பாடி தரப்போ.. ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே காலாவதியாகிவிட்டது என்று வாதம் வைத்து வருகிறது. அப்படி இருக்கும் போது.. ஓபிஎஸ் இதில் கையெழுத்து போடுவதை எடப்பாடி விரும்பவில்லை. அப்படி இருவரும் கையெழுத்து போட்டால்.. அதை நீதிமன்றத்தில் ஆதாரமாக காட்டி.. பாருங்க இன்னமும் நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைக்கும்.

இதை தடுக்கும் விதமாக இந்த மனுக்களில் கையெழுத்து போடவே எடப்பாடி தரப்பு மறுத்து வருகிறது. இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு சின்னம் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்திலும், தான்தான் இன்னும் ஒருங்கிணைப்பாளர் என்பதை நிரூபிக்கும் வகையிலும்  இந்த மனுக்களில் கையெழுத்து போட முன் வந்தார். படிவம் ஏ மற்றும் பியில் நான் கையெழுத்து போடுகிறேன் என்று ஓபிஎஸ் இறங்கி வந்தார்.

இதில் கையெழுத்து போட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ரெடியா என்று ஓபிஎஸ் கேட்டார். அதோடு எடப்பாடிக்கு இது தொடர்பாக கடிதமும் எழுதினார். ஆனால் இந்த கடிதத்தை அவர் கையால் கூட சீண்டவில்லை. அதை தொட்டுப்பார்க்க கூட அவர் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அப்படியே உதவியாளர் மூலமே கடிதத்தை திருப்பி அனுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.