அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததுடன், தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகை தாக்கல் செய்த மனு நீதி மன்றத்திற்கு வராததால் இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், அதுவரை மணிகண்டனை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாப்பு காவலருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், மணிகண்டனின் அரசு ஓட்டுநர், அலுவலக உதவியாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், நாளை விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.