நாமக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் கோவிட் -19 பரிசோதனை செய்த 15 தனியார் ஆய்வகத்திற்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்

தமிழகத்தில் கோவிட் -19 பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகம் என 5 இடங்களில் கோவிட் -19 பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் சில தனியார் ஆய்வகம் மற்றும் மருத்துவமனைகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி பெறாமல், கோவிட் -19 பரிசோதனை செய்து சேலம், கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி முடிவுகளை சேகரிப்பதாகவும், அவற்றை முறையாக சுகாதாரத்துறைக்கு தெரிவிப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் கோவிட் -19 நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே 15-க்கும் மேற்பட்ட தனியார் ஆய்வகத்துக்கு சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.