கோவில் நிலங்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

தமிழக இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் 36 ஆயிரத்து 861 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் பல ஏக்கர் நிலங்கள் தனியார் வசம் உள்ளன. இதற்கு பலர் வாடகை மற்றும் குத்தகை தொகையை கோவில்களுக்கு செலுத்தினாலும் சிலர் வாடகை தராமல் இருப்பதுடன், கோவில் நிலங்களை தங்கள் பெயர்களுக்கும் மாற்றிக்கொள்வது தெரியவந்து உள்ளது.

இதனால் கோவில்களுக்கு வரவேண்டிய வருமானம் முறையாக வராததால் கோவில்கள் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இந்நிலையில், கோவில்களுக்கு நிலங்களை வழங்கியவர்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த நிலங்களை விற்பனை செய்யக்கூடாது. குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை 6 வாரங்களில் தயாரித்து இணையதளத்தில் வெளியிட வேண்டும். அத்துடன் குத்தகை, வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செலுத்தாதவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.250 கோடி மதிப்புள்ள வடபழனி கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவில்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். தற்போது முழுவீச்சில் இந்தப்பணி நடந்து வருகிறது.

அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 861 கோவில்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பான ஆவணங்கள் நேற்று முழுமையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. எந்த கோவிலுக்கு சொந்தமான நில விவரங்களை எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.