தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 7 ஆண்டு பாஜ ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் 459 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, ரூ.20 லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு பெருக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த வருவாய் பெருக்கத்தின் காரணமாக மக்கள் மீது கடுமையான சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, 2014 ல் 410 ஆக இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.819 ஆக இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களிடம் கொள்ளையடிப்பதை எதிர்த்தும், எரிபொருட்கள் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், ஜூன் 11ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
அதையொட்டி தமிழகத்தில் நடைபெறுகிற போராட்டங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் துறைகளின் தலைவர் ஆகியோர் அவசியம் பங்கேற்க வேண்டும். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.