மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவிக்கான போட்டியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் சமீபத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்ற மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயை பிரதமர் நரேந்திர மோடி தனியாகவும் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. இதனால் சிவசேனா, பா.ஜனதா இடையே மீண்டும் பழைய உறவு துளிர்விடுவதாக கூறப்பட்டது. இதற்கிடையே பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அளித்த பேட்டி ஒன்றில் புலியுடன் நட்பு கொள்ள விரும்புவதாக கூறினார். இது சந்தேகங்களுக்கு மேலும் வலு சேர்ந்தது.
இந்நிலையில் சந்திரகாந்த் பாட்டீலின் பிறந்த நாளான நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , எனக்கு சமீபத்தில் ஒருவரிடம் இருந்து புலி புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்று பரிசாக கிடைத்தது. இதை பரிசளித்தவரிடம் இது நல்ல பரிசு என்றும் ‘நாங்கள் எப்போதும் புலிகளுடன் நண்பர்கள்’ என்றும் கூறினேன். இருப்பினும் புலி அவர்களின் அடையாளம் என்பதால் ஊடகங்கள் சிவசேனாவுடன் இணைத்து பார்த்துவிட்டனர்.
நாங்கள் எப்போதும் அனைவருடன் நட்பு பாராட்ட விரும்புகிறோம் என்பது உண்மை தான். ஆனால் நாங்கள் காட்டில் உள்ள ஒரு புலியுடனான நட்பையே விரும்புகிறோம். கூண்டில் அடைபட்டுள்ள புலியுடன் இல்லை என தெரிவித்தார்.