கண்ணீர் விட்டு அழுத ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதது ஆந்திராவில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சி செய்து வரும், நிலையில் சட்டப்பேரவையில் வேளாண் துறை தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது.

அப்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்தார்.இதனால் ஆவேசமடைந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூச்சலிட்டனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமான சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழையப் போவதில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.

செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, “கடந்த 2 ஆண்டுகளாக ஆளும் கட்சியினால் நான் அவமானப்படுத்தப்பட்டு வந்தாலும் பொறுமையுடன் இருந்தேன். இன்றைக்கு அவர்கள் எனது மனைவியை விமர்சித்துள்ளனர். நான் எனது வாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என தெரிவித்தார்.