கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி கூறியதில் எதுவும் நடக்கவில்லை…! பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 5 ஆண்டு நிறைவு..!

பாரத பிரதமர் நரேந்திரமோடி 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி நள்ளிரவில் டெலிவி‌ஷனில் திடீரென எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல்‘ஊழலுக்கும், கருப்பு பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக போரிட்டு நாட்டை தூய்மைப்படுத்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாக செல்லாது என அறிவித்தார்.

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளின் மதிப்பு ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி. ஆனால், வங்கிக்கு திரும்ப வந்தது ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடியாகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முடியாமல் வங்கி முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர்.

இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடுமையாக காங்கிரஸ் கட்சி மத்திய அரசை சாடியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி இன்று அளித்த பேட்டியில், “ பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் முடிகின்றன.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி கூறியதில் எதுவும் நடக்கவில்லை. பணப் புழக்கம் அதிகரித்துள்ளது, ஊழல் அதிகரித்துள்ளது, பயங்கரவாத செயல்களுக்குப் பணம் செல்கிறது. 2016-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த சூழல் நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.