உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் உத்திர பிரதேச காவல்துறை இதுவரை மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் ஆஷிஸ் மிஸ்ரா மீதும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளதால் அவர் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி காவல்துறை முதல் சம்மன் அனுப்பினர். ஆனால், உடல்நிலை காரணமாகக் கூறி காவல்துறை விசாரணைக்கு ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராகவில்லை.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி நேற்று முன்தினம் 2-வது சம்மனை காவல்துறை ஆஷிஸ் மிஸ்ராவின் வீட்டில் ஒட்டினர். ஆனால் மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா நேற்று முன்தினம் இரவு சொந்த கிராமத்துக்குச் சென்றதால் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா நேற்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஆஷிஸ் மிஸ்ரா சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் காவல்துறை டிஐஜி உபேந்திர அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகினார்.
ஏறக்குறைய 11 மணிநேரம் லக்கிம்பூர் கெரி கலவரம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். ஆனால், காவல்துறை விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, ஆஷிஸ் மிஸ்ராவை காவல்துறை நேற்று இரவு 11 மணி அளவில் கைது செய்து நீதிபதியின் வீட்டில் ஆஜர் படுத்த நீதிபதி ஆஷிஸ் மிஸ்ராவை திங்கள் கிழமை வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.