வால்பாறையில் தடுப்பூசி பற்றாக்குறை பொதுமக்கள் வாக்குவாதம்

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, முடீஸ், சோலையார் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அந்தந்த எஸ்டேட் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இறுதியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காத்து நிற்கும்போது பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. உடனே அங்கு காத்திருந்த பொதுமக்கள் ஏன் தடுப்பூசி போடவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டனர்.

அதற்கு அவர்கள், குறைந்தளவில் மட்டுமே தடுப்பூசி வந்ததாகவும், அது தீர்ந்து விட்ட தால் வந்த பின்னர் போடப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.