தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்கள் அது பல வழிகளில் அதிக விலைக்கு இன்றும் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து லாரி, பஸ்களில் புகையிலை பொருட்கள் கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருவது மட்டுமின்றி ரெயில்களில் மூலமும் புகையிலை பொருட்கள் கடத்திவரப் படுகின்றன.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மதுரைக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக நெடுஞ்சாலை ரோந்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சின்னாளப்பட்டி அருகே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறை நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பழங்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை நிறுத்தி காவல்துறை சோதனை நடத்தினர். அதில் தர்பூசணி, அன்னாசி, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்கள் 20 மூட்டைகளில் இருந்தது. பின்னர் லாரியில் வந்த 2 பேரிடம் காவல்துறை விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்க சந்தேகம் அடைந்த காவல்துறை லாரியில் ஏற்றிவந்த பழ மூட்டைகளை ஆய்வு செய்தனர்.
அப்போது பழ மூட்டைகளில் இருந்து புகையிலை பொருட்கள் வாசனை வந்தது. இதைத்தொடர்ந்து பழ மூட்டைகளை காவல்துறை அகற்றி பார்த்தபோது, அதற்குள் 27 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.