மதுரையில் காவல் அதிகாரியாக பணியாற்றிய ஓ.பாஸ்கரன் என்பவர் ரூ.1,500 லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து கடந்த 2014-ம் ஆண்டு மதுரை காவல் ஆணையர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பின்னர், பாஸ்கரன் மீது துறை ரீதியான ஒழுங்கு விசாரணையை அதிகாரிகள் நீண்டகாலமாக மேற்கொள்ளவில்லை. அதையடுத்து பாஸ்கரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, முக்கியத்துவம் இல்லாத பணியை அவருக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., மதுரை காவல் ஆணையர் ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்து உத்தரவில், பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்த பின்னர் துறை ரீதியான விசாரணையை மதுரை காவல் ஆணையர் மேற்கொள்ளவில்லை. அவரை விசாரணை மேற்கொள்ளவிடாமல் எது தடுத்தது என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் எங்களுக்குப் பல சந்தேகங்கள் உள்ளன.
பொது ஊழியரை பணியிடை நீக்கம் செய்துவிட்டு, அவருக்கு எதிரான துறை ரீதியான விசாரணையை பல ஆண்டுகளாக மேற்கொள்ளவில்லை என்றால், எந்த ஒரு நீதிமன்றம், பணியிடை நீக்கத்தை ரத்து செய்து பணி வழங்கத்தான் உத்தரவிடும். எனவே, தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது.
அதேநேரம், பாஸ்கரனுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்த வேண்டும். மேலும், இப்போதெல்லாம் லஞ்சம் என்பது நாகரீகமாகிவிட்டது. இதுபோன்ற கேவலமான செயல் சம்பந்தப்பட்ட துறை மற்றும் பணியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. முன்பெல்லாம் கூடுதலாக பணி செய்வதற்காக வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் கேட்கப்பட்டது.
ஆனால், இப்போது அரசுத் துறைகள் அனைத்திலும் லஞ்சம் புகுந்துவிட்டது. இதற்கு காரணமே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதுதான். லஞ்சம் தன்னுடைய வேர்களைப் பரப்பி, சமுதாயத்தை கரையான் போல் அரித்து வருகிறது என தெரிவித்தனர்.