1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள பூளவாடிச் சிற்றூரில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் தம்பதியினருக்கு நாராயணசாமி மகனாகப் பிறந்தார். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். பின்னர் நாராயணசாமியின் பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.
அதனை தொடர்ந்து 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்து நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டார். ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார்.
தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82-வது வயதில் மறைந்தார். பின்னர் இவர் புகழை போற்றும் வகையில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து கொடுத்தது. மேலும் கவிராயர் உடுமலை நாராயணகவி பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று அவரது பிறந்த நாள் விழாவில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னாள் MLA ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக அரசு சார்பில் நாராயணகவி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.