தாசில்தார் வாகனத்தை, விஷ பாட்டிலுடன் முற்றுகையிட்ட இருளர் சமுதாய மக்கள்

அரியலூர் மாவட்டம் விளாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தேளூர், குடிசல், மண்ணுழி ஆகிய ஊர்களில் கடந்த 2006-07-ம் ஆண்டு மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு, ஒரத்தூர் இருளரின மக்கள், விவசாயம் செய்த நிலத்தை பட்டா போட்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இருளர் சமுதாய மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்ததைத்தொடர்ந்து, 2012-ம் ஆண்டு பட்டா ரத்து செய்யப்பட்டது.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி, இருளர் சமுதாயத்தினருக்கு பட்டா வழங்க முன்வந்தார். இதையடுத்து அந்த இடத்தை அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு, இடத்தை அனுபவித்து வந்த இருளர் சமுதாய மக்களுக்கு பட்டா வழங்க, 2014-ம் ஆண்டு அரியலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

தற்போது இருளர் சமுதாயத்தினர் ஆழ்துளை கிணறு அமைத்து எள், கடலை, உளுந்து, பருத்தி, முந்திரி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வருவாய்த்துறை அதிகாரிகள், இருளரின மக்கள் விவசாயம் செய்துவரும் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அரியலூர் தாசில்தார் ராஜமூர்த்தி, நில அளவையர், விளாங்குடி கிராம நிர்வாக அலுவலர் அனுசுயா தேவி, தேளூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருளர் சமுதாயத்தினர் பட்டா மற்றும் கையில் விஷ பாட்டிலுடன் சென்று, தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.