நிதி நிறுவனத்தின் சார்பில் கடன் தருவதாக கூறி மோசடி: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் மனு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அண்ணா புதுகாலனி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆராயி. என்பவர் தனது மகனுடன் வந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், எனது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர், தான் கோவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு ரூ.5 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு முன் பணமாக ரூ.1 லட்சம் அனுப்புமாறும் கேட்டு கொண்டார். இதை உண்மை என்று நம்பி நான், எனது மகன் திருமலையின் கூகுள் பே செயலி மூலம், மர்மநபர் அளித்த செல்போன் எண்ணிற்கு அன்றைய தினமே அக்கம்பக்கம் கடன் வாங்கி ரூ.5 ஆயிரம் அனுப்பினேன்.

பின்னர் கடந்த 5-ந் தேதி அன்று ரூ.30 ஆயிரமும், 7-ந் தேதி அன்று ரூ.38 ஆயிரத்து 500-ம் என மொத்தம் ரூ.73 ஆயிரத்து 500 அனுப்பினேன். அதன்பின்னர் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு போதிய படிப்பறிவு இல்லாததால் ரூ.5 லட்சம் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டனர். எனவே, என்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தர வேண்டும் மனுவில் என தெரிவித்துள்ளார்.