திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜய லலிதாம்பிகை ஆய்வு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் திருப்பூர் மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்களில் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்பட்டதா? செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்துகின்றனவா? என்றும் கொரோனா சம்பந்தமான வழிகாட்டு முறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா? என 129 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன் 2½ கிலோ, காளான் 2 கிலோ, காலாவதியான, சமைத்த உணவுப் பொருட்கள் 13 கிலோ, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 3½ கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அந்த ஓட்டல்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. மேலும் 2 கடைகளுக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் சுத்தம் இல்லாத உணவு தயாரித்து விற்பனை செய்த 2 கடைகளுக்கு முன்னேற்ற அறிவிப்பு நோட்டீசு வழங்கப்பட்டது. 7 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது.

பழைய காகிதங்களில் சூடான உணவுப் பொருட்களை பார்சல் செய்த 3 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது. இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. துரித உணவு தயார் செய்பவர்கள் தினமும் சமையல் எண்ணையை மாற்றிக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அனைத்து கடைகளிலும் உரிமம், பதிவு சான்று பெறப்பட்டுள்ளதா? மற்றும் புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்றும் புதுப்பிக்காத கடைகளை உரிய நேரத்தில் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு 34 கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.

உணவு வணிகர்கள் அனைவரும் முக கவசம், தலைக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்து பணிபுரிய வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் உணவு சம்பந்தப்பட்ட புகார்கள் குறித்து 94440 42322 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.