முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும்

தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறைதான் காரணம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஆகையால் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாள் கொண்டாடப்படும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இருந்தார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, பல்வேறு தடைகளையும் தாண்டிதான் திராவிட மாடல் ஆட்சி சாதித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைய இது மணிப்பூரும் அல்ல, காஷ்மீரும் அல்ல.

தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறைதான் காரணம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். குற்றச்சம்பவங்களுக்கு உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதால் அமைதி நிலவுகிறது. குடியிருப்புகளை சுற்றி சந்தேக நடமாட்டம் இருந்தால் காவல்துறையினருக்கு தகவல் கூறுங்கள். ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாள் கொண்டாடப்படும்.

காவலர் நாள் கொண்டாடப்படும் தினத்தில் சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் காவலர்களுக்கு மருத்து பரிசோதனை செய்துகொள்ள வழிவகை செய்யப்படும். காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது, ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். குற்றம் நடந்த உடன் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை பாராட்டுகிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.