போக்சோ வழக்கில் 3 பேரை லஞ்சம் பெற்று விடுவித்த காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியை 17 வயது சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதேபோல் சிறுமியின் உறவினர் ஒருவரும் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறப்படுகின்றது.
இது பற்றி சிறுமி விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 17 வயது சிறுவன், சிறுமியின் உறவினர், தாய் உள்பட மேலும் சிலரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், சிறுமியை 17 வயது சிறுவன், சிறுமியின் உறவினர் ஆகிய 2 பேர் பலாத்காரம் செய்ததும், அதற்கு உடந்தையாக சிறுமியின் தாய் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து காவலர்கள் அவர்கள் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 3 பேரை காவலர்கள் விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விடுவித்த 3 பேரிடமும், காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் லஞ்சம் கேட்டு பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த விவகாரம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து ஜெயக்குமார் ரகசிய விசாரணை நடத்தினார். இந்நிலையில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏட்டும், எழுத்தருமான சிவசக்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்தார். மேலும் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் சரக காவல்துறைத் துணைத்தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்ற காவல்துறைத் துணைத்தலைவர் திஷா மித்தல், விருத்தாசலம் மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் கடலூர் மாவட்ட காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.