R.N. ரவி குற்றச்சாட்டு: காவல்துறையினர் மிரட்டியதால் ஊட்டி மாநாட்டுக்கு துணைவேந்தர்கள் வரவில்லை..!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை காவல்துறையினர் மிரட்டியதால் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என ஆளுநர் R.N. ரவி குற்றம்சாட்டினார். நீலகிரி மாவட்டம், ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்க, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டில் ஆளுநர் R.N. ரவி பேசுகையில், “இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. சிலர் ஊட்டி வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் மிரட்டப்பட்டனர். மாநில அரசின் காவல்துறையினர் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று கதவை தட்டி, நீங்கள் வீடு திரும்ப முடியாது என மிரட்டியுள்ளனர். மேலும், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் எதுவும் தெரிவதில்லை. ஆண்டுக்கு 6,500 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர்.

இவர்கள் ரூ.15,000 சம்பளத்துக்கு தினக் கூலிகளாக பணிபுரிகின்றனர். இவர்கள் அரசு துறைகளில் ஏதாவது பணியில் சேருவதே இலக்காக இருக்கிறது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவிலேயே சிறந்து விளங்கிய தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் நிலை தற்போது கவலைக்குரியதாக உள்ளது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையுள்ளது” என காட்டமாக R.N. ரவி தெரிவித்தார்.