பட்டப்பகலில் கேட்டை எகிறி குதித்து இரும்பு கம்பிகளை திருடி செல்லும் நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த ஜனனி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் அடிக்கடி இரும்பு கம்பிகள் திருடு போனது தெரிய வந்தது. இதையடுத்து கம்பெனி உரிமையாளர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கம்பெனிக்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டனர்.
அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்க மற்றொருவர் அங்கும் இங்கும் சுற்றி பார்த்து விட்டு இரும்பு கேட்டின் மீது எகிறி குதித்து உள்ளே செல்கின்றார். உள்ளே சென்ற நபர் இரும்பு கம்பிகளை எடுத்த கொடுக்க மற்றொருவர் கம்பிகளை வாங்கி வைக்கின்றார். அதன்பின்னர் இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து கம்பிகளை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். இந்த சிசிடிவி காட்சிகளை கண்டு கம்பெனி உரிமையாளர் அதிர்ச்சியடைகின்றார்.
இந்த சம்பவம் குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாங்காடு காவல்துறை கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து இரும்பு கம்பிகளை திருடி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.