காவலர்கள் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் போக்குவரத்து விதிகளை மீறும் காவல்துறையினர் மீது பணியிடை நீக்கம் செய்யப்படும் என காவல்துறையின் தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையின் முக்கிய பகுதிகளில் மோட்டார் வாகனங்களில் செல்லும்போது விதிகளை மதிக்காமல் பயணம் செய்தல் தானியங்கி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு விதிமீறலுக்கு மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதமும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய விட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதேவேளையில், முன்னுதாரணாமாக இருக்க வேண்டிய காவல்துறையினரே பல நேரங்களில் ஹெல்மெட் அணியாமல் சாலையில் பயணிப்பது என போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்க விட்டு செல்கிறார்கள். இது தொடர்பாக சில நேரங்களில் வாகன ஓட்டிகள் அவ்வப்போது வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விடுகிறார்கள்.
இந்நிலையில், காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் போக்குவரத்து விதிகளை மீறும் காவல்துறையினர் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.