டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் வாழும் தமிழர்கள் குடியிருப்புகளை அழித்து வாழ்வாதார உரிமையைப் பறிக்க முயலும் டெல்லி அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்து என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை இடித்து, மூன்று தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்ற டெல்லி மாநில பாஜக அரசு முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தங்கள் வாழ்விடங்களைக் காக்கப் போராடும் தமிழ் மக்களை டெல்லி மாநில பாஜக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஜங்புராவில் அரசால் இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்றாக 50 கி.மீ. தொலைவிலுள்ள நரேலாவில் வெறும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மாற்று வீடுகள் ஒதுக்கப்படும் என டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. டெல்லி மதராஸி கேம்ப் பகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி எனும்போது மக்களின் விருப்பத்திற்கு மாறாக வீடுகளை இடித்து வாழ்விடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது என்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். பாஜக ஆளும் வட மாநிலங்களில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் குடியிருப்புகள் தொடர்ச்சியாக இடிக்கப்படும் கொடுங்கோன்மையை உச்சநீதிமன்றமே கடுமையாகக் கண்டித்து, எச்சரித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவருக்கும் அவர்களின் வசிப்பிடங்களிலேயே மாற்றுக் குடியிருப்புகள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டுமென டெல்லி மாநில பாஜக அரசை வலியுறுத்துகிறேன். தமிழர் குடியிருப்புகளை அழித்து வாழ்வாதார உரிமையைப் பறிக்க முயலும் டெல்லி அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.