ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,151 கோடி கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில், பாஜக ஆளாத மாநிலங்களிலும் தேசியக் கல்வி கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது என்று தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
அதில், தமிழ்நாடு ஏற்கனவே தரமான கல்வியை கொடுக்கிறது. பிஎம்ஸ்ரீ மூலம் கல்வித் தரத்தை உயர்த்த போகிறீர்கள் என்றால், அப்படி அந்த திட்டத்தில் என்ன மாற்றம் செய்ய போகிறீர்கள்? புதிய கல்விக் கொள்கையை பிஎம்ஸ்ரீ மூலம் கொண்டு வருவதை ஏற்கனவே அறிந்து கொண்டுவிட்டோம். மும்மொழிக் கொள்கை, 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு போல் ஒன்றை கொண்டு வருவது என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இது அதிகளவில் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது மாணவர்கள் இடைநிற்றலை குறைத்திருக்கிறோம். மீண்டும் ஒரு மொழிப்போரை கொண்டு வரக்கூடாது என்ற வகையில் தமிழக அரசு கண்டனத்தை தெரிவித்து வருகிறோம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கி உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.
இளைய சமுதாயத்தை மனதில் வைத்து திட்டத்தை உருவாக்கி இருந்தால், புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. சாதாரணமாக அமர்ந்து கையெழுத்திடுங்கள்.. பேசிக் கொள்ளலாம் என்ற ரீதியில் வலியுறுத்தி இருக்கிறார். இருமொழிக் கொள்கையில் படித்துள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். மருத்துவர்கள், தொழில்நுட்பம், இஸ்ரோ, ஐடி என்று பல்வேறு துறைகளிலும் இருமொழிக் கொள்கையின் கீழ் படித்தவர்களே முதன்மையாக இருக்கிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கை குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை. தூண்டிலை போட்டுவிட்டு மீன் சிக்காதா என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழின் பெருமையை நீங்கள் சொல்லி அறிய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றல் சுமையை உருவாக்கும். இந்தி இல்லாமல் 3-வது வேறு மொழியை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை.
பாடத்திட்டத்திற்கு வெளியே இந்தி மொழியை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கத்தான் செய்கிறோம். கட்டாயம் என்று சொல்லி ஒரு மொழியை கொண்டு வரும் போதுதான், தேவையில்லாத மன அழுத்தத்தை மாணவர்களுக்கு கொடுக்கும். மும்மொழி கொள்கை மாணவர்களின் கால்களில் சங்கிலியை போட்டு இழுப்பதை போன்றதாகும். இந்தியாவில் 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சொந்த மொழியாக ஒரியா மொழி உட்பட 56 மொழிகள் முழுமையாக இந்தி திணிப்பால் அழிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது. தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்ற சொல்லைதான் எதிர்க்கிறோம் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.