திருமாவளவன் கேள்வி: ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா..?

ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? எல்லோரும் இந்தியை பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது? என்னை ஏன் இந்தி மாணவனாக மாற்ற முயற்சிக்கிறாய் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக இருக்கிறது.

நாகரீக அணுகுமுறை என்பதை முற்றாக தவிர்த்துவிட்டு, யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்று நிலைப்பாட்டை எடுத்து அரசியல் செய்கிறார். அவரது அணுகுமுறை வியப்பாக இருக்கிறது. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை. எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் அனுமதி கேட்டுள்ளார்கள். அவ்வளவுதான். அதற்கான அனுமதி பெறவில்லை, வகுப்புகள் தொடங்கப்படவில்லை, இன்னும் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை. ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

அந்த இடம் எங்களுடையது என்பதால் என் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு மாணவர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தால், மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்று தந்திருக்கலாம். அதற்காக குரல் கொடுக்கவில்லை. அதேபோல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற கல்வி நிறுவனம், விளிம்பு நிலை மக்களுக்கான கல்வி நிறுவனமாக இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு முறையாக நிதி வருவதில்லை. மத்திய அரசு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான உதவித் தொகை தரப்படுவதை நிறுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது.

ஏழை மாணவர்களின் கல்வி முக்கியம் என்று அண்ணாமலை கருதினால், அவர்கள் போஸ்ட் மெட்ரிக் ஸ்கார்லர்ஷிப் வாங்கி கொடுப்பதை பற்றி பேசி இருக்க வேண்டும். அதனை ஏன் அண்ணாமலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து குரல் கொடுத்திருக்கிறாரா? அந்த ஸ்காலர்ஷிப்பிற்கு கூட வருமான வரி விதிக்கிறார்கள். முன்னேறிய சமூக மாணவர்களின் பெற்றோருக்கு ரூ.8 லட்சம் வருமான வரம்பு. ரூ.8 லட்சத்திற்கு மேல் பெற்றோரின் வருமானம் இருந்தால் மட்டுமே போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் இல்லை. ஆனால் ஓபிசி மாணவர்களின் பெற்றோருக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சம்தான். ரூ.2 லட்சத்திற்கு மேல் பெற்றோர் சம்பளம் பெற்றால், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடையாது.

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் பெற்றோர் ரூ.2.5 லட்சம் ஊதியம் பெற்றால், அவர்களுக்கும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடையாது. இவ்வளவு மோசமான வருமான வரம்பை வைத்துள்ள மத்திய அரசிடம் சென்று அண்ணாமலை கேட்டிருக்காலாமே? அண்ணாமலை ” போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கொடுக்க கூடாது என்பதற்காக சூது, சூழ்ச்சி செய்யும் பாஜக இவ்வளவு பெரிய பாடுபாடு வைத்துள்ளது. இந்த பாகுபாட்டை களைவதற்கு பாஜகவும், அண்ணாமலையும் என்ன குரல் கொடுத்துள்ளார்கள்? இந்தி மீது வெறுப்பு கிடையாது.

ஆனால் இந்தியை இந்தியாவின் மூலைகளிலும் கற்றாக வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது. ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? அரசுப் பள்ளியில்தான் மாணவர்கள் அதிகமாக படிக்கிறார்கள். இந்தியா முழுக்க ஒரே கொள்கையை திணிப்பது ஏன்? எல்லோரும் இந்தியை பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது? என்னை ஏன் இந்தி மாணவனாக மாற்ற முயற்சிக்கிறாய்? இதற்கு பின் ஒரு மறைமுக நோக்கம் இருக்கிறது. தேசத்தில் ஒரே மொழிக் கொள்கை என்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்தார்.