தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புற்றீசல் போல் மசாஜ் சென்டர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபடுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கியமான இடங்களுக்கு வேலை தேடி செல்லும் அப்பாவி பெண்களும் மற்றும் சென்னைக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்பு தேடி செல்லும் பெண்கள் பலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களின் எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, கிராமப்புறங்களில் இருந்து வேலை தேடி நகர்ப்புறத்துக்கு வரும் இளபெண்கள் சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக சொன்னதை கேட்டு வரும் பெண்கள், குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களால் மசாஜ் சென்டர்களில் வந்து சிக்கி கொள்கிறார்கள். அத்துடன், அவர்களின் மூளை சலவை செய்யப்பட்டு ஆசைவார்த்தைகளுக்கு ஏமாந்துபோய்,சொந்த ஊர் திரும்பி செல்ல முடியாமல் தவித்து வரும், எத்தனையோ அப்பாவி பெண்களை காவல்துறை பாதுகாப்பாக மீட்டும் வருகிறார்கள்.
இந்நிலையில், “சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று முன்தினம் மதியம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்பா மற்றும் சலூனை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
2 ஸ்வைப்பிங் மிஷின், 9 பெண்கள் அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி இடத்தில் செயல்பட்டு வந்த ஸ்பா மற்றும் சலூனில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய குற்றத்திற்காக அயனாவரம் ஈஸ்வர்ராவ் மகன் விஜயகுமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், 2 செல்போன்கள் மற்றும் 2 ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 9 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள மேற்படி ஸ்பா மற்றும் சலூனின் உரிமையாளரை தனிப்படை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட எதிரி விஜயகுமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 9 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.