செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான பிரச்சனை அண்ணன் – தம்பி பிரச்சனையை போன்றது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர்களான MGR மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதனால் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக தரப்பில் கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து வேறு அனைவரின் பெயர்களையும் கூறினார். அதுமட்டுமல்லாமல் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நேற்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமென்றால் அதிமுக இருக்க வேண்டும். ஒன்றுபட வேண்டும், வளர்ச்சி பெற வேண்டும். ஒரு சின்ன சம்பவம் நடந்துவிட்டது. ஒரு குடும்பத்தில் அண்ணன் – தம்பி இடையில் எவ்வளவு பிரச்சனைகள் வரும்.. அதன்பின்னரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் பிரச்சனையை பெரிதுபடுத்த தேவையில்லை.
அடுத்து 202ல் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்கிறோம். அதிமுகவில் எந்த உட்கட்சி விவகாரமும் தூக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின், யாராக இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறுவேன்.. சாட்டையை சுழற்றுவேன் என்றெல்லாம் கூறினார். ஆனால் விஜய்-தான் சாட்டையை சுழற்றுவதாக போட்டுள்ளார்கள். செங்கோட்டையன் அண்ணன் எங்களின் மூத்த சகோதரர். MGR, ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர். அவர் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டாரா? ஆனால் காவலர்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை விட்டுவிட்டு கேட்காத ஒருவருக்கு காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.