சீமான்: நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை…! அதற்குள் இப்படி அலறினால் எப்படி..?

நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை கைதான் ஓங்கி இருக்கிறேன் அதற்குள் இப்படி அலறினால்.. எப்படி? என சீமான் தெரிவித்தார். கடந்த ஜனவரி 8 -ஆம் தேதி கடலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீமானின் பேச்சுக்கு எதிராக தமிழ்தேசிய, பெரியாரிய இயக்கங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நீலாங்கரையிலுள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்று கைதாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் இன்று பதிலளித்தார். அப்போது, “நானும் பிரபாகரனும் இருக்கும் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. படம் முதல் முதலில் வெளியான போதே இது எடிட் செய்யப்பட்டது என்று கூறியிருக்கலாமே. 15 ஆண்டுகளாக எங்கு படுத்து இருந்தீர்கள். பெரியாரைத் தாக்கி பேசும் போது உடனடியாக பதிலுக்கு பிரபாகரனை தாக்கி பேச தொடங்கி இருக்கிறீர்கள். கொளத்தூர் மணி என்பவரை நான் மிகவும் மதிக்கிறேன்.

ஆனால் நான் சோவையும், குருமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு போய் சி.பா.ஆதித்தனாரின் காலில் விழுந்து நாம் தமிழர் கட்சியை வாங்கி வந்தேன் என்று பொய்யாக கூறுகிறீர்களே நியாயமா? நாம் தமிழர் கட்சி என் தாத்தனுடையது. தமிழ் தந்தையினுடையது. ஒவ்வொரு தமிழனுக்கும் இதில் உரிமை இருக்கிறது. அந்தக் கட்சிக்கு நாம் தமிழன் என்று பெயர் வைப்பதற்கு நான் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்?

சோவுக்கும் குருமூர்த்திக்கும் நாம் தமிழர் கட்சியுடன் சம்பந்தம் இருக்கிறதா? எத்தனை நாட்களுக்கு இந்த கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவீர்கள்? நான் உங்களை எதிர்த்து பேசமாட்டேன் என்கிற ஒரே தைரியத்தில் தானே இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். பெரியார் உங்களுக்கு தேவை எனில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள். அடிப்படையிலே பெரியார் பிழையானவர். தமிழ், தமிழர், தமிழர் அரசு இன்று பேசுவது பித்தலாட்டம் என்றும், திராவிட எழுச்சியை தடுப்பதற்கு செய்யக்கூடிய அயோக்கியத்தனம் என்றும், அவ்வாறு பேசுவது ஆரியர்களுக்கு செய்கிற கைக்கூலித்தனம் என்றும் பெரியார் பேசியிருக்கிறார்.

தமிழ் முட்டாள்களின் பாசை, தமிழ் சனியன், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ் சனியனை விட்டு ஒழியுங்கள், தமிழில் என்ன இருக்கிறது? தமிழ் உங்களை படிக்க வைத்ததா? என்றெல்லாம் பெரியார் கேள்வி எழுப்பியிருந்தார். என் நிலத்தில் அப்படி பேசுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் கன்னடர். நீங்கள் என் நிலத்தில் வந்து அமர்ந்து கொண்டு தமிழ் முட்டாள்களின் மொழி என்று கூறுகிறீர்கள். என் மொழியை தாழ்த்தி பேசுவதற்கு உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது? நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை கைதான் ஓங்கி இருக்கிறேன் அதற்குள் இப்படி அலறினால்.. எப்படி?

பெண்ணிய உரிமைக்காக பேசிய பெரியார், தாலியை அறுத்து எறிய சொன்னார். திராவிடர் கழகம் அதை செய்தது. அதே பெரியார், கருப்பையை அறுத்து எறிய சொல்லியிருந்தார். பெண்கள் என்ன பிள்ளை பெற்றுக்கொள்ளும் இயந்திரமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். பெரியாரியம் பேசும் பெருமக்கள் குறிப்பாக, அக்கா அருள்மொழியோ, அம்மையார் கனிமொழியோ, மதிப்பிற்குரிய அம்மையார் சுந்தரவல்லியோ கருப்பையை அறுத்து எறியவில்லையே? குழந்தை பெற்றிருக்கிறீர்களே! இதுதான் பெரியாரை பின்பற்றும் லட்சமணமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.