தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்தில் நீங்களே சுமுக தீர்வு காணாவிட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண் போம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டத்தில் இருந்தே, தமிழக அரசுக்கும், அவருக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தி மொழி, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கு ஆதரவான கருத்துகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
தமிழக அரசு தயாரித்து வழங்கும் ஆளுநர் உரையை சட்டப்பேரவையில் வாசிக்காமல், சில பகுதிகளை நீக்கியும், சேர்த்தும் படித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வெளியேறினார். தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்பட்டு வரும் நிலையில், நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதற்கிடையே, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான அரசாணைகளுக்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரம் தொடர்பாகவும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி,ஆளுநருக்கு எதிரான வழக்குகளை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும். ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு விவகாரங்களில் தீர்வு காணப்பட்டுள்ளதா, அல்லது பழைய நிலையே தொடர்கிறதா? தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், அபிஷேக் சிங்வி, ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்கதையாகவே உள்ளது. இன்னும் முடிவுக்கு வரவில்லை.
தற்போதுகூட துணைவேந்தர்கள் நியமனத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. தமிழக அரசின் அனைத்து அதிகாரங்களிலும் ஆளுநர் தலையிடுகிறார். இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகும், அவரது போக்கில் முன்னேற்றம் இல்லை. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கூடுதல் மனுவையும் இந்த வழக்குடன் சேர்த்து விசாரித்து, ஆளுநர் தரப்பில் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழக அரசின் இந்த கூடுதல் மனுவுக்கு தனியாக நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டியது இல்லை. இந்த வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்படும். மேலும், ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்தில் நீங்களே சுமுக தீர்வு காணாவிட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண்போம்’’ என ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் அறிவுறுத்தி விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.