மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர்கள் பகுதியிலில் இந்தவர்கள் ‘அரிட்டாபட்டியை காப்போம்’ என்ற பதாகையுடன் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நாயக்கர் பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் டங்ஸ்டன் எடுப்பதற்கான குத்தகை ஏல உரிமையை இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய சுரங்கதுறை அமைச்சகம் கொடுத்தது. இந்த சுரங்க திட்டம் வந்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சமீபத்தில் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சட்டப்பேரவையில் இத்திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு விழா காலை 7.35 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.
பார்வையாளர்கள் பகுதியில் இருந்த சிலர் ‘அரிட்டாபட்டியை பாதுகாப்போம்’ (SAVE ARITTAPATTI) என டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக பதாகை வைத்திருந்தனர். அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக பார்வையாளர்கள் வைத்திருந்த பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது.