குஜராத் டெய்லருக்கு ரூ.86 லட்சத்துக்கு மின் கட்டண பில்..!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டெய்லருக்கு ரூ.86 லட்சம் மின் கட்டணம் செலுத்துமாறு வந்த பில்லால் அதிர்ச்சி அடைந்துள்ளார். குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலுள்ள சோர் கலி பகுதியில் நியூ பேஷன் டெய்லர் என்ற பெயரில் தையல் கடையை அன்சாரி என்பவர் நடத்தி வருகிறார். டெய்லர் அன்சாரி தனது கடையின் மின் கட்டண பில்லை, யுபிஐ மூலம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அண்மையில் இவருக்கு ரூ.86 லட்சத்தை மின் கட்டணமாக செலுத்துமாறு அவருக்கு பில் வந்தபோது அதைப் பார்த்து அன்சாரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அன்சாரி இது தொடர்ந்து மின் வாரிய அலுவலகத்துக்குச் சென்று ரூ.86 லட்சம் செலுத்துமாறு வந்த பில்லை காட்டியுள்ளார். இதையடுத்து மின் வாரிய அதிகாரிகள் கடைக்கு வந்த மின் மீட்டரை சோதித்தனர். அதில் உள்ள மீட்டரின் ரீடிங்கின் கடைசி 2 எண்களையும் சேர்த்து யூனிட்டாக மாற்றி, மின் கட்டண பில்லை தவறுதலாக தயாரித்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து குஜராத் மின் வாரிய அதிகாரியான ஹிதேஷ் படேல் கூறுகையில், “மீட்டரில் உள்ள யூனிட்டின், கடைசி 2 எண்களையும் சேர்த்து தவறுதலாக ஊழியர் கணக்கிட்டுள்ளார். அதாவது ரூ.1,540 என வரவேண்டிய கட்டணம் ரூ.86 லட்சம் என்று மாறிவிட்டது. இதைத் தொடர்ந்து ரூ.1,540 செலுத்துமாறு புதிய பில்லை அவருக்கு அனுப்பியுள்ளோம்” என தெரிவித்தார்.