உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய அரசின் திட்டமான 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “மழை பெய்ய தொடங்கினால், துணை முதலமைச்சர் உடனடியாக மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கு வருவார், ஆய்வு செய்வார் அப்புறம் சென்று விடுவார். பிறகு இந்த மழை நேரத்தில் பொதுமக்களாகிய நாம் தான் கஷ்டப்பட வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
சிறிய மழை பெய்தாலும் கூட உடனடியாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதாக கூறி கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து விடுவார். துணை முதலமைச்சர் ஆய்வு செய்த விளம்பரம் இன்று மாலை வரை சேனல்களில் ஒளிபரப்பப்படும். அந்த வகையில் விளம்பரத்திற்கான ஆட்சியே தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. தற்போது முதலமைச்சர் உள்ள மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போதில் இருந்து தற்போது வரை சிறுமழை வந்தாலும் சென்னை தத்தளித்து கொண்டுதான் இருக்கிறது.
மேலும், உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள். கமலஹாசன் முழுவதும் திமுகவாக மாறி விட்டார் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.