நெய்வேலி NLC ஒப்பந்த தொழிலாளர்கள் கைது..!

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்க சென்னையை நோக்கி புறப்பட்ட NLC ஒப்பந்த தொழிலாளர்களை காவல்துறை கைது செய்து தனியார் மண்பத்தில் தங்க வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் NLC நிறுவனத்தில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் பலர் NLC நிறுவனத்துக்காக வீடு, நிலங்களை கொடுத்து சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் NLC நிறுவனம் இதுவரை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. வாரிசு அடிப்படையிலும் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கும், கரோனா காலகட்டத்தில் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கும் தற்பொழுது வரை பணி வழங்கவில்லை. 20 சதவீத போனஸ் வழங்கப்படவில்லை.

மேலும், இதுதொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை தொடர் போராட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டும் கோரிக்கைகளை என்எல்சி நிறுவனம் ஏற்கவில்லை. இந்நிலையில், 12-ஆம் தேதி அன்று பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பயணம் செய்து தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதன்படி இன்று காலை நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் வேன் மற்றும் பேருந்துகளில் சென்னைக்கு புறப்படவிருந்த 100-க்கும் மேற்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை காவல்துறை கைது செய்து NLC ஆர்ச் கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட NLC ஒப்பந்த தொழிலாளர்கள் திருமண மண்டப வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கைது செய்ததை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல பண்ருட்டியில் இருந்து ரயிலில் புறப்படவிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 20 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.