20 ஆண்டுகளுக்கு மேலாக நியாய விலை கடையில் பணியாற்றிய தற்காலிக பணியாளர் தர்ணா..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நகராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவுத்துறை மூலம் நியாய விலை நகர கடையின் எண் -3 செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நியாய விலை கடையில் குமாரசாமி தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திடீரென நியாய விலை மண்டல மேலாளர் சௌமியா தற்காலிக பணியாளர்களை வெளியேறும்படி கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3 நம்பர் நியாய விலை கடையில் கடந்த ஒரு வார காலமாக அரிசி பருப்பு, சர்க்கரை எண்ணெய் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் தினந்தோறும் இன்று போய் நாளை வா என பொதுமக்களை ஊழியர்கள் அலைக்கழித்து வருகின்றனர்.

மேலும் நியாய விலை கடையில் பணியாற்றி வந்த குமாரசாமியை எந்தவித அரசு ஆணையும் வழங்காமல் கடையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு தெரிவித்து வருகிறார். இதனால் மணமுடைந்த குமாரசாமி கடை முன் அமர்ந்து தர்ணா ஈடுபட்டார்.  இந்த செய்தி அறிந்த செய்தியாளர்கள் அங்கு குவிந்தனர்.

செய்தியாளர்களிடம் குமாரசாமி பேசுகையில், தாராபுரம் தாலுகாவிலுள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தொடர்ந்து 22 ஆண்டுகள் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறேன். என் மீது துறை ரீதியாகவும் பொதுமக்களும் எந்த புகார் அளிக்கவில்லை. என் மீது வன்மம் கொண்டு உடனடியாக வேலையை விட்டு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி வந்த நிலையில் நான் நீதிமன்றம் மூலம் நியாயம் கேட்டு சென்ற பொழுது அங்கேயும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து என் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்க இன்று முழு பொறுப்பு ரத்து செய்து எனக்கு எவ்வித முன் அறிவிப்பும் கொடுக்காமல் பத்துக்கு மேற்பட்ட கடை ஊழியர்களை வைத்து என்னை மிரட்டி வெளியேற்றி உள்ளனர்.

மேலும் தாராபுரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ரிட்டையர்ட் ஆனவர்களை வைத்து செக்யூரிட்டி சர்வீஸ் என்ற பெயரில் மாதம் 10000 ரூபாய் சம்பளம் வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு பென்ஷன் தொகையும் உண்டு. அதுபோல் என்னையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு நியாய விலை கடையை விட்டு வெளியே வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

எனக்கு வயது 47 ஆகிறது 20 ஆண்டுகளுக்கு மேலாக நியாய விலை கடையிலேயே வேலை செய்ததால், வேறு எந்த வேலையும் தெரியாது வேதனையுடன் தெரிவித்தார். ஆகையால் நியாய விலை கடையை விட்டு வெளியேறியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.