காதலனை கரம் பிடிக்க காதலனுடன் சேர்ந்து ஒரே ஒரு பொய் சொல்லி கம்பி எண்ணும் பெண் ..!

“ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணனும்” என சொல்ராங்க..! நான் சொன்னது ஒரே ஒரு பொய் தான்..

நாகர்கோவிலில் வாலிபரை திருமணம் செய்ய காவல் துணை ஆய்வாளர் என கூறி அனைவரையும் ஏமாற்றிய பெண்ணை காவல்துறை கைது செய்தனர். தேனி மாவட்டம் வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு வேலைக்கு சென்றார். அப்போது, சென்னை ரயில் நிலையத்தில், நாகர்கோவிலை சேர்ந்த சிவா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த ஒரு நாள் பழக்கத்தில் 2 பேரும் நெருக்கமாகினர்.

அதன்பின்னர் அபி பிரபாவும், சிவாவும் சென்னையில் ஒன்றாக வசிக்க தொடங்கினர். இந்நிலையில் வேலைக்கு செல்லும் பெண் தான் வேண்டும் என சிவாவின் தாயார் கறாராக கூறி, சிவா வீட்டில் அவருக்கு பெண் தேடும் படலம் நடந்துள்ளது.இதையடுத்து அபி பிரபாவிடம், நீ ஏதாவது உயர்ந்த வேலையில் இருக்குமாறு கூறினால் தான், எனது தாயார் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிப்பார் என சிவா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 2 பேரும் இது தொடர்பாக ஆலோசித்து, அபி பிரபா காவல் துணை ஆய்வாளராக இருப்பதாக கூற முடிவு செய்தனர். அதன்படி சென்னையில் ஒரு கடையில் காவல் துணை ஆய்வாளர் உடையை வாங்கிக் கொண்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிவா, அபி பிரபாவை அழைத்துக் கொண்டு பேருந்தில் நாகர்கோவில் வந்தார். காவல்கிணறு பகுதியில் இறங்கி ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, அபி பிரபா காவல் துணை ஆய்வாளர் உடையை அணிந்து கொண்டு காரில் நாகர்கோவில் புறப்பட்டனர்.

சிவா முன் கூட்டியே வீட்டுக்கு சென்று காத்திருக்க அபி பிரபா, மட்டும் காரில் சிவா வீட்டுக்கு சென்றார். ஏற்கனவே சிவா, தனது தாயாரிடம் தான் காதலிக்கும் பெண் காவல் துணை ஆய்வாளர் என கூறி உள்ளார். எனவே சிவாவின் தாயாரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து, தனது மருமகள் காவல் துணை ஆய்வாளர் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார். பின்னர் காரில் காவல் துணை ஆய்வாளர் உடையுடன் வந்திறங்கிய அபி பிரபாவை சிவாவும், அவரது தாயாரும் வரவேற்றனர்.

அபி பிரபாவை காவல் துணை ஆய்வாளர் உடையில் பார்த்ததும், சிவாவின் தாயாருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தனது உறவினர்களுக்கும் போன் செய்து தகவல்களை பரிமாறினார். பின்னர் அதே பகுதியில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து சிவாவையும், அபி பிரபாவையும் தங்க வைத்தார். உறவினர்கள் வீட்டுக்கும் அழைத்து சென்றார். அபி பிரபாவும், காவல்துறை சீருடையுடன் மிடுக்கான தோற்றத்தில் வலம் வந்தார்.

இந்நிலையில் சிவாவின் உறவினர் வெங்கடேஷ் என்பவரின் மனைவி, நாகர்கோவிலில் பியூட்டி பார்லர் வைத்துள்ளார். அந்த பியூட்டி பார்லருக்கு, தனது மருமகள் என கூறி அபி பிரபாவை சிவாவின் தாயார் அழைத்து சென்றார். அங்குள்ளவர்கள் விசாரித்த போது, அவர்களிடம் அபி பிரபா, தான் 2023 பேட்ஜ் என்றும், சென்னையில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றி விட்டு, தற்போது சென்னை சென்ட்ரல் ரயில்வே இருப்பதாக கூறினார்.

முகத்தில் உள்ள மருக்களை நீக்கி, பேஷியல் செய்த அபி பிரபா, பணம் எதுவும் கொடுக்காமல் சென்று விட்டார். பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அதே பியூட்டி பார்லருக்கு அபி பிரபா சென்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பியூட்டி பார்லர் உரிமையாளர், அபி பிரபாவை செல்போனில் போட்டோ எடுத்து தனக்கு தெரிந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு அனுப்பி இவர் 2023 பேட்ஜ் காவல் துணை ஆய்வாளர் தானா? என கேட்டு உள்ளார்.

அவர் தனக்கு தெரிந்த 2023 பேட்ஜ் காவல் துணை ஆய்வாளர்களிடம் அபி பிரபாவின் போட்டோவை அனுப்பி விசாரித்த போது, அபி பிரபாவின் குட்டு அம்பலமானது. அவர் காவல் துணை ஆய்வாளர் இல்லை என்பது தெரிந்ததும், நைசாக பேசி பியூட்டி பார்லரில் அவரை அமர வைத்து விட்டு வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உண்மையான காவலர்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அபி பிரபா, சிவாவை திருமணம் செய்ய காவல் துணை ஆய்வாளர் ஆக நடித்ததாக கூறினார். இதையடுத்து அபி பிரபா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.