நீதி தேவதை சிலையில் மாற்றதிற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு..!

நீதி தேவதை சிலை மற்றும் சின்னத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நீதிபதிகளின் நூலகத்தில் ஆறடி உயரம் கொண்ட நீதி தேவதையின் சிலை திறக்கப்பட்டது. பழைய சிலையுடன் ஒப்பிடும்போது புதிய சிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக, பழைய நீதி தேவதையின் கண்கள் துணியால் கட்டப்பட்டிருந்த நிலையில், புதிய சிலையில் கண்கள் துணியால் மூடப்படவில்லை. ஒரு கையில் தராசும், மறு கையில் வாளுக்கு பதிலாக அரசமைப்பு சட்ட புத்தகமும் புதிய சிலையில் இடம்பெற்றது. தலையில் கிரீடத்துடன் வெள்ளை நிற உடையில் இருப்பது போன்று இந்த புதிய சிலை உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதி தேவதை சிலையின் இந்த தலைகீழ் மாற்றத்துக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறி்த்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் கபில் சிபல் மற்றும் நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து பேசினார்.

அதில், நீதி தேவதையின் சிலை மற்றும் சின்னத்தில் உச்சநீதிமன்றம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் நிர்வாக குழுவின் கவனத்துக்கு வந்துள்ளது. நீதி நிர்வாகத்தில் சமபங்குதாரர்களாக இருக்கிறோம். ஆனால், இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டபோது எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. மேலும், இந்த மாற்றத்துக்கான பின்னணி என்ன என்பது குறித்தும் தெரியவில்லை.

அதபோன்று, நாங்கள் வழக்கறிஞர் சங்கத்துக்காக உணவு விடுதி கட்ட கோரிக்கை விடுத்த இடத்தில் அருங்காட்சியகம் கட்ட எடுத்துள்ள நடவடிக்கைக்கும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஒருமனதாக தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.