லட்டு கலப்பட விவகாரத்தில் பவன் கல்யாண் நேரில் ஆஜராக ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு..!

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக வேண்டும் என ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுபிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது ஏழுமலையான் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பின் கீழ் 5 உறுப்பினர்களை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குழு விரைவில் விசாரணையை தொடங்க உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு எதிராக ஹைதராபாத்தை சேர்ந்த இ.ராமாராவ் என்ற வழக்கறிஞர் சிவில் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், “கலப்படம் செய்யப்பட்ட நெய் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உறுதிபட கூறியுள்ளார். இதில் இந்துக்களின் மனம் புண்படும்படி அவர் பேசியுள்ளார். அவரது சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களிலும் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என மெனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஹைதராபாத் சிவில் நீதிமன்ற தலைமை நீதிபதி ரேணுகா நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். நவம்பர் மாதம் 22-ஆம் தேதி பவன் கல்யாண் இதே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.